Monday, April 30, 2007

341. மருத்துவ மாணவி கௌசல்யாவுடன் சந்திப்பு

அன்பு நண்பர்களே,

சிரமம் பார்க்காமல், எனது இப்பதிவை வாசித்து விடும்படி ஒரு வேண்டுகோளுடன்,

கௌசல்யாவின் மருத்துவப் படிப்புக்கு வேண்டி, உங்களிடம் பொருளுதவி பெற்று, அதை அவருக்கு வழங்கியது குறித்த என் பதிவை வாசித்திருப்பீர்கள்.  அவர் இப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். சமயம் கிடைக்கும்போது, அவரை சந்தித்து பேசி வருகிறேன். நன்றாக படிக்குமாறு (உங்கள் சார்பில்) அறிவுரையும் தந்து வருகிறேன்!!!

கௌசல்யா ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற, ஒரு ஆங்கிலப் பயிற்சி மையத்தில் விசாரித்து, அவரை ஒரு தபால் வழி பயிற்சிப் படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறேன். நான் அறிந்தவரை, முதலில் பார்த்ததை விட தற்போது கௌசல்யாவின் நடை உடை பாவனைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது, மன உறுதியும், தன்னம்பிக்கையும் கூடியிருப்பதாகத் தோன்றியது.

பத்து நாட்கள் முன்பு, கௌசல்யாவின் அழைப்பின் பேரில் அவரது ஸ்டான்லி மருத்துவ விடுதியின், 'ஹாஸ்டல் டே' விழாவுக்கு என் மகளுடன் சென்றிருந்தேன்.  பிற மாணவிகள் தமதமது பெற்றோரை அவ்விழாவுக்கு அழைத்திருப்பதாக, கௌசல்யா கூறியிருந்தார். அதனால், கௌசல்யாவின் (உங்கள் சார்பு) ரெப்ரெசண்டேடிவ் ஆக நான் நிச்சயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து, அதன்படி (முக்கியமான சமயங்களில் என்னை சங்கடப்படுத்தும் ஒற்றைத்  தலைவலி படுத்தியபோதும்:)) விழாவுக்குச் சென்றேன். கௌசல்யாவுக்கு மிக்க மகிழ்ச்சி.

விழாவுக்கு அமைச்சர் பூங்கோதையும், நடிகர்கள் ஸ்ரீகாந்தும், பசுபதியும் வருகை தந்தனர்.  ஏற்கனவே நடந்து முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. வருங்கால மருத்துவர்கள் சிறப்பாக நடனமாடினர் :)  டின்னரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  விழா முடியும் வரை நாங்கள் இருந்தது குறித்து, கௌசல்யாவுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி, என் மகளிடமும் மிகுந்த அன்பு காட்டினார்.  தலைவலியை சமாளிப்பது அவ்வளவு கடினமான விஷயமாகத் தோன்றவில்லை!!!

 'கௌசல்யா' நிதி குறித்த வரவு/செலவு கணக்கு விவரங்களை, பொருளுதவி செய்த நண்பர்களுக்கு மடல் வழி அனுப்பி விட்டேன்.  இவ்வருடம், கௌசல்யா தவிர இன்னும் 3 மாணவ/மாணவிகளுக்கு உதவ உத்தேசம். கல்வி உதவி கேட்டு சில கோரிக்கைகள் வந்துள்ளன. அவை குறித்து விசாரித்து, அவர்கள் படிப்பு மற்றும் குடும்ப சூழலை கணக்கில் கொண்டு, உங்களுக்கு தகவல் அளித்து, பின் உங்கள் சம்மதத்துடன்/அனுமதியுடன், அவர்களுக்கு உதவுவதே என் விருப்பமும், ராம்கியின் விருப்பமும்.

இந்த வருட முடிவில், உங்களிடம் மீண்டும் உதவி கேட்டு என் வேண்டுகோளை முன் வைக்க உத்தேசம்.  எப்போதும் போல உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்சமயம் நிதி கைவசம் உள்ளது.

மீண்டும் உதவி செய்த நண்பர்களுக்கும், கௌசல்யா வாழ்வில் முன்னேற வாழ்த்தும் நெஞ்சங்களுக்கும் உளமார நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 341 ***

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

Test comment !

தருமி said...

தொடரட்டும்

Unknown said...

மே தின வாழ்த்துக்கள்!!!

1GB with 1 Freedomain only Rs1500/-
http://space2inet.com

Ram Ravishankar said...

Dear Bala -
I am interested in helping .. can you pl contact me at ram.ravishankar@gmail.com? Alternately, pl give me your contact info, I'll get in touch with you.
regards ..ram

வடுவூர் குமார் said...

சில பின்னூட்டங்கள் பதிவின் நோக்கத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கே!!?
மற்றபடி,உங்கள் பொதுத்தொண்டு மேலும் சிறக்க முடிந்த அளவு உதவுகிறேன்.

தகடூர் கோபி(Gopi) said...

பாலா,

உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள்.

//முக்கியமான சமயங்களில் என்னை சங்கடப்படுத்தும் ஒற்றைத் தலைவலி படுத்தியபோதும்//

சிறுவயதில் எனக்கும் ஒற்றைத் தலைவலி இருந்தது. எங்கள் பாட்டி சொன்ன வைத்தியம் செய்ததில் குணமானது.

அந்த மருத்துவம்:

அதிகாலை 3 மணிக்கு எழுந்து நல்லெண்ணெய்(எள் எண்ணெய்) உடன் கொஞ்சம் சுக்கு நசுக்கி இட்டு சூடு செய்யவும். சுக்கு நன்றாக பொரிந்தபின் கீழே இறக்கி ஆறவைத்து கை பொறுக்கும் சூட்டில் தொட்டு தலையில் தடவவும். பிறகு சூடான தண்ணீரில் குளித்து/ தலை உலர்த்திவிட்டு வந்து கால் மணி நேரத்திற்கு பிறகு (முன்னிரவில் வைத்த) ரசம் ஊற்றி சாதம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்கச் செல்லுங்கள். பின் வழக்கம் போல காலை எழுந்து உங்கள் பணிகளை மேற்கொள்ளுங்கள். இது போல 2-3 முறை செய்தால் ஒற்றைத் தலைவலை விலகும்.

இந்த மருத்துவம் கேட்பதற்கு நகைப்பாய் இருக்கும். சுக்கு/எள்ளெண்ணெய் தவிர மருத்துவ குணமுள்ள ஏதும் இதில் இல்லை தான். ஒரு வேளை அதிகாலை நேரம், பழைய ரசம் சாதத்தில் ஊறிய மருத்துவ குணமுல்ல சில மசாலா பொருட்கள் இதெல்லாம் காரணமா எனத் தெரியாது. எனக்கு குணமானது. உங்களுக்கும் குணமாகலாம் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். முயன்று பார்க்கலாமே.

said...

கோபிக்கு மிக்க நன்றி,ஆனால் எனக்கில்லை ஒற்றைத் தலைவலி.
வடுவூர் குமார்

enRenRum-anbudan.BALA said...

அன்பின் கோபி,
தங்கள் அன்புக்கும், பரிந்துரைத்த சிகிச்சை முறைக்கும் நன்றிகள் பல, நிச்சயம் முயற்சி செய்து பார்க்கிறேன்.

ராம் ரவிசங்கர்,
நன்றி. நான் எழுதிய ஈமெயில் கிடைத்ததா ?

வடுவூர் குமார், தருமி,
வாழ்த்துக்கு மிக்க நன்றி.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails